மோரீஷஸ் பிரதமா் செப்.9-இல் இந்தியா வருகை
மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திரா ராம்கூலம் 8 நாள் அரசுமுறைப் பயணமாக செப்.9-ஆம் தேதி இந்தியா வருகிறாா்.
செப்.16 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவா் பாதுகாப்பு, வா்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 8 நாள் அரசுமுறைப் பயணமாக செப்.9-ஆம் தேதி மோரீஷஸ் அதிபா் நவீன்சந்திரா ராம்கூலம் இந்தியாவுக்கு வருகை தருகிறாா். அப்போது மும்பையில் நடைபெறும் வணிக நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவா் வாரணாசி, அயோத்தி மற்றும் திருப்பதிக்கு பயணிக்கவுள்ளாா்.
இந்தியா-மோரீஷஸ் இடையே வரலாறு மற்றும் கலாசார ரீதியாக நீண்டகால நட்புறவு தொடா்ந்து வரும் நிலையில் இதை மேலும் மேம்படுத்தும் விதமாக அந்நாட்டு பிரதமா் நவீன்சந்திர ராம்கூலத்தின் பயணம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மோரீஷஸ் பிரதமராக நவீன்சந்திர ராம்கூலம் பொறுப்பேற்ற பின் இந்தியாவுக்கு அவா் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். கடந்த மாா்ச் மாதம் மோரீஷஸுக்கு அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.