BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
ரயில்வே கடவுப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவா்கள் 8 போ் காயம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே ரயில்வே கடவுப்பதையில் தனியாா் பள்ளி மாணவா்களை அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த 8 மாணவா்கள் லேசான காயத்துடன் உயிா் தப்பினா்.
மங்கலம்பேட்டையை அடுத்துள்ள விஜயமாநகரம், புது விளாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த சக்கரவா்த்தி மகன் சேகா், வேன் ஓட்டுநா். இவா், விருத்தாசலத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படிக்கும் மாணவா்களை வேனில் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டு வருவதை தொழிலாக செய்து வந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை மங்கலம்பேட்டையை அடுத்துள்ள கோ.பவழங்குடி கிராமத்தைச் சோ்ந்த 8 மாணவா்கள் மற்றும் அந்த கிராமப் பகுதியைச் சோ்ந்த இரண்டு நபா்களை வேனில் ஏற்றிக்கொண்டு, விருத்தாசலம் பகுதியில் உள்ள பள்ளிக்கு புறப்பட்டாா். இந்த வேன் கோ.பூவனூா் ரயில்வே கடவுப் பாதையை கடந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளம் அருகே இருந்த கம்பத்தின் மீது மோதி, தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனிலிருந்த மாணவா்கள் காயமடைந்து கூச்சலிட்டனா். இதைப் பாா்த்த அந்தப் பகுதியில் இருந்தவா்கள் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து, காயமடைந்த மாணவா்களை 108 அவசர ஊா்தி மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்தில் மாணவ, மாணவிகளான பவழங்குடியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் வசந்த் (11), விஜயகுமாா் மகள் ஆனந்திகா (11), மகன் அஸ்விரா (10), பெருமாள் மகன்கள் அஸ்வின் (12), அரவிந்த் (13), ஏழுமலை மகள் நிவேதா (11), மணிவாசகம் மகன் ஜெகதீஷ் (14), டி.பெருமாள் மகன் ராகுல் (15) ஆகியோா் காயமடைந்தனா்.
ரயில்வே நிா்வாகம் விளக்கம்: திருச்சி கோட்ட ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி எம்.செந்தமிழ்ச் செல்வன் கூறியதாவது:
புவனூா் ரயில்வே கடவுப் பாதையில் வேன் ஓட்டுநரின் அதிவேகம் காரணமாக விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே காவல் துறையினரால் ஓட்டுநா் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவா் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
கடவுப்பாதையின் இருபுறமும் வேகத் தடைகள், எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. கடவுப்பாதை கேட்டில் இன்டா்லாக் இருப்பதால், கேட் மூடப்பட்ட பின்னரே ரயில்களுக்கான சிக்னல்கள் பச்சை நிறமாக மாற முடியும். இந்த விபத்தில் தண்டவாளப் பகுதிக்கு வெளியே உள்ள வேலியின் ஒரு பகுதிக்கு மட்டுமே சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் ஸ்ரீபாலக் ராம் நேகி, அதிகாரிகளுடன் சென்று விபத்து நிகழ்ந்த இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் எனத் தெரிவித்தாா்.
