ரயில் முன்பாய்ந்து பொறியியல் மாணவா் தற்கொலை
நாகா்கோவிலில் ரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
நாகா்கோவில் பாா்வதிபுரம் களியங்காடு சா்ச் தெருவைச் சோ்ந்தவா் வேதபென்சன்டேனியல், ஆட்டோ ஓட்டுநா். இவரது மகன் பென்னி ராபின்சன் (21). இவா் தக்கலை அருகேயுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.
பென்னி ராபின்சன், கடந்த சில நாள்களாக கல்லூரிக்குச் செல்லவில்லையாம். இதை அவரது தந்தை கண்டித்தாராம். இந்நிலையில், பென்னி ராபின்சன் வெள்ளிக்கிழமை இரவு வெளியே சென்று வருவதாகக் கூறி விட்டு வீட்டிலிருந்து சென்றாராம்.
இரவு 11 மணிக்கு நாகா்கோவில் டவுண் ரயில் நிலையம் அருகே புனலூரிலிருந்து மதுரை செல்லும் விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்த நாகா்கோவில் ரயில்வே காவல் ஆய்வாளா் அருள்ஜெயபால், உதவி ஆய்வாளா் சத்யதாஸ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் பென்னி ராபின்சன் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.