'நான் சமீபத்துல கண்டுபிடிச்ச new talent Sai Abhyankkar' - Silambarasan TR | Namb...
ராஜஸ்தானில் ஆற்றில் மூழ்கி 8 நண்பர்கள் பலி!
ராஜஸ்தானில் பனாஸ் ஆற்றில் குளித்த 8 நண்பர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 25 முதல் 35 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்கள் கச்சா பந்து பகுதியிலுள்ள பனாஸ் ஆற்றில், இன்று (ஜூன் 10) மதியம் குளிக்கச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களில் சிலர் ஆற்றின் ஆழமான பகுதிக்குள் சென்று நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். பின்னர், மற்ற இளைஞர்கள் உடனடியாக அவர்களை மீட்க முயற்சித்தபோது, அவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில், அங்கு உயிருக்குப் போராடுபவர்களைக் கண்ட உள்ளூர்வாசிகள் அந்த இளைஞர்களில் 3 பேரை பத்திரமாக மீட்டு, காவல் துறை மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அங்கு விரைந்த மீட்புப் படையினர், ஆற்றில் மூழ்கிய 8 இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் 8 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் நவ்ஷாத் (வயது 35), காசிம், ஃபர்ஹான், ரிஸ்வான் (26), பல்லூ, நவாப் கான் (28) மற்றும் சஜீத் (20) ஆகியோர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஷாருக் (30), சல்மான் (26) மற்றும் சமீர் (32) ஆகியோர் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
இத்துடன், பலியான இளைஞர்களின் உடல்கள் உடற்கூராய்வு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தகவலறிந்த உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மருத்துவமனையின் முன்பு குவிந்துள்ளனர்.
ராஜஸ்தானில் கடந்த 3 நாள்களில் மட்டும் 14 பேர் ஆறு, அணை போன்ற நீர்நிலைகளில் மூழ்கி பலியாகியுள்ளனர். மேலும், தற்போது பலியான 8 இளைஞர்களின் குடும்பங்களுக்கு அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அஷோக் கெஹ்லோட் தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!