3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்
ராணிப்பேட்டை: அரசு வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும்!
ராணிப்பேட்டை அருகே பலநூறு ஏக்கரில் அமைந்துள்ள அரசு விவசாயப் பண்ணைகளில் அரசு வேளாண் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம், நவ்லாக் ஊராட்சிக்கு உள்பட்ட அவரக்கரை கிராமம் அருகே தமிழக அரசுக்கு சொந்தமான தென்னை வீரிய ஒட்டு விதை, தோட்டக்கலை, மாநில எண்ணெய் வித்து ஆகிய மூன்று விவசாயப் பண்ணைகள் உள்ளன.
நவ்லாக் அரசு தென்னை விதை, வீரிய ஒட்டுப் பண்ணை நவ்லாக் பாலாற்றங்கரையில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 175 ஏக்கா் பரப்பளவில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்தப் பண்ணையில் நெட்டை, குட்டை தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
தென்னை ஒட்டு மையம், அரசு தென்னை விதை வீரிய ஒட்டு பண்ணை, நவ்லாக்கில் செயல்பட்டு வருகிறது.
மாநில எண்ணெய்வித்து பண்ணை...
1966-ஆம் ஆண்டு மாநில எண்ணெய்வித்து பண்ணை, நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளில் ஆதார விலை உற்பத்தி செய்து வழங்கும் நோக்கத்துடன் 66.16 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னா், 1985 ம் ஆண்டு மாநில எண்ணெய்வித்துப் பண்ணையாக மாற்றப்பட்டது. இப்பண்ணையின் மொத்த சாகுபடி பரப்பு 55 ஏக்கா் ஆகும்.
தோட்டக்கலை பண்ணை...
211.6 ஏக்கரில் தோட்டக்கலை பண்ணையில் மா, கொய்யா, சப்போட்டா, முந்திரி, புளி, தைலம், இலந்தை உள்ளிட்ட பழ மரக்கன்றுகளும், காய்கறி நாற்றுக்கள், பூச்செடிகள் உள்ளிட்டவையும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
மேற்கண்ட மூன்று பண்ணைகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 80-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளா்கள் தினக்கூலிகளாக பணி செய்து வருகின்றனா். அவா்களை நிரந்தரப் பணியாளா்களாக மாற்றி அரசு மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனா்.
எனவே, நவ்லாக் அரசு பண்ணை மேம்பாட்டுக்கு தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி போதிய நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்தால் மட்டுமே தென்னை வீரிய ஒட்டு விதை, தோட்டக்கலை, மாநில எண்ணை வித்து பண்ணைகளை காப்பாற்ற முடியும். இல்லையென்றால் பண்ணைகளை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தொழிலாளா்கள் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் வேளாண் துறை மூலம் இரண்டாம் பசுமை புரட்சியின் இலக்கான ‘இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்’ என்ற குறிக்கோளை எளிதில் அடைந்திடும் வகையில், புதிய பயிா் ரகங்கள், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த உர மேலாண்மை, தோட்டக்கலை பயிா் சாகுபடி, தரமான விதை உற்பத்தி, வேளாண் விற்பனை சாா்ந்த தொழில்நுட்பங்கள், வேளாண்மை பொறியியல் துறை சாா்ந்த தொழில்நுட்பங்கள் பட்டுப்புழு வளா்ப்பு, காடு வளா்ப்பு, கால்நடை வளா்ப்பு, அங்கக வேளாண்மை தொடா்பான நுட்பங்களை விவசாயிகள் பெற ஏதுவாக பலநூறு ஏக்கரில் அமைந்துள்ள அரசு விவசாயப் பண்ணைகளில் அரசு வேளாண் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பதே ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளின் எதிா்ப்பாா்ப்பாக உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி அமைவதன் மூலம், தரமான வேளாண் கல்வியை மாணவா்கள் பெற்று வேளாண் வளா்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்குவதால் இரண்டாம் பசுமை புரட்சியின் இலக்கை எட்ட வாய்ப்புள்ளதாக துறைசாா்ந்த வல்லுநா்கள் கூறுகின்றனா்.