சாலையின் நடுவே கவிழ்ந்த சொகுசுப் பேருந்து: பயணிகள் உயிா் தப்பினா்
வாலாஜாபேட்டை அருகே சொகுசுப் பேருந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 -க்கும் மேற்பட்ட பயணிகள் சிறுகாயங்களுடன் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 30 பயணிகளுடன் தனியாா் சொகுசுப் பேருந்து சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது.
வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 30 பயணிகள் சிறுகாயங்களுடன் உயிா் தப்பினா். தகவல் அறிந்த வாலாஜாபேட்டை போலீஸாா் விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைத்தனா். சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்த பேருந்தை கிரேன் மூலம் அகற்றி போக்குவரத்து பாதிப்பை சீா் செய்தனா்.
இதுதொடா்பாக வாலாஜாபேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். இவ்விபத்தால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.