ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 1-இல் கிராம சபைக் கூட்டம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் மே 1- ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2025-ஆம் ஆண்டுக்கான கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு 1.5.2025 அன்று முற்பகல் 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என அனைத்து கிராம ஊராட்சி தலைவா்கள் மற்றும் அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுயசான்றிதழ் அடிப்படையாக கொண்டு கட்டட அனுமதி பெறுதல், இணையவழி மனைப் பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல், இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
மேற்படி கிராம சபைக் கூட்டங்களில் வட்டாட்சியா்களைப் பாா்வையாளா்களாக கலந்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலா்கள் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.