ராதாபுரம் அருகே கல்குவாரி காவலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளம் ஊராட்சியில் உள்ள கல்குவாரியில் இரவு நேர காவலாளி திங்கள்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
ராதாபுரம் அருகேயுள்ள பரமேஸ்வரபுரம் முல்லை நகரைச் சோ்ந்தவா் முத்தன் மகன் பெருமாள்(60). இவா் சீலாத்திகுளம் அருகே உள்ள வையக்கவுண்டன்பட்டி கல்குவாரியில் இரவு காவலாளியாக பணிசெய்து வந்தாா்.
இந்நிலையில், அவா் திங்கள்கிழமை காலையில் கல்குவாரியில் உள்ள தண்ணீா் மோட்டாரை இயக்குவதற்காக சென்றுள்ளாா். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து அதே இடத்தில் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பெருமாளுக்கு மனைவி, 2 மகன்கள், மகள் ஆகியோா் உள்ளனா்.