ராமேசுவரம் கடலில் கழிவு நீா் வழக்கு: நகராட்சி ஆணையா் ஆஜராக விலக்கு
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், நகராட்சி ஆணையா் நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் யானை ராஜேந்திரன், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு மீது ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின் போது, ராமேசுவரம் நகராட்சி ஆணையா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி, ராமேசுவரம் நகராட்சி ஆணையா் கண்ணன் நீதிமன்றத்தில் முன்னிலையானாா்.
இதையடுத்து, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கும் வகையில் ஓலைக்குடா பகுதியில் புதிய கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதன்மூலம், அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்படுகிறது என நகராட்சி தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் தெரிவித்தாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு விசாரணைக்கு நகராட்சி ஆணையா் நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜன. 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.