ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்வு! ரூ. 86.40
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று (ஜன. 15) 13 காசுகள் உயர்ந்து ரூ. 86.40 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய வணிக நேர முடிவில் 17 காசுகள் சரிந்து ரூ. 86.53 காசுகளாக இருந்த நிலையில், இன்று 13 காசுகள் உயர்ந்துள்ளது.
கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு ரூபாய் மதிப்பு, ஒரே நாளில் 0.3% உயர்ந்ததுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.50 ஆகத் தொடங்கி அதிகபட்சமாக ரூ. 86.55 வரை சென்றது. இது நேற்றைய வணிக நேர முடிவை விட கடுமையான சரிவாகும்.
பிற்பாதியில் படிப்படியாக ரூபாய் மதிப்பு உயர்ந்து ரூ. 86.28 காசுகளாக இருந்த நிலையில் வணிக நேர முடிவில் ரூ. 86.40 காசுகளாக நிலைப்பெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்த நிலையில், உள்ளூர் பங்குகளும் நேர்மறையாக இருந்ததால், ரூபாய் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
இதேபோன்று சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையும் 0.35 சதவீதம் அதிகரித்து 80.20 டாலர்களாக வணிகமானது.
பங்குச் சந்தை ஏற்றம்
ரியாலிடி மற்றும் ஐடி துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எனினும் ஆற்றல், பார்மா, ஆட்டோ துறை பங்குகள் சரிவுடன் இருந்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 224.45 புள்ளிகள் உயர்ந்து 76,724.08 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.29 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37.15புள்ளிகள் உயர்ந்து 23,213.20 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.16 சதவீதம் உயர்வாகும்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?