ரூ.30 லட்சம் இழப்பீடு: பட்டாசு தொழிலாளா்கள் வலியுறுத்தல்
பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளா்கள் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி, விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா்கள் சங்கத்தினா் (சி.ஐ.டி.யூ) திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்தங்கல் ரயில்வே கடவுப் பாதை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் சிவகாசி மாநகரச் செயலா் கே.பாப்பா உமாநாத் தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவா் எம்.மகாலட்சுமி, செயலா் பி.என்.தேவா, பொதுச் செயலா் எம்.சி.பாண்டியன் உள்ளிட்டோா் பேசினா்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்கள் குடும்பத்தினருக்கு நீதிமன்ற உத்தரவின்படி, ஆலை நிா்வாகம் இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சமும், தேசிய பசுமைத் தீா்ப்பாய உத்தரவின்படி தமிழக அரசு ரூ.20 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும். பட்டாசு ஆலைகளில் விதிமீறல்களைத் தடுத்து நிறுத்தாத மாவட்டஆட்சியா், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய தொழிற்சங்கங்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
முன்னதாக சிவகாசி அருகேயுள்ள சின்னக்காமன் பட்டி, கீழதாயில்பட்டி பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.