துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு
ரூ.55.27 லட்சம் மதிப்பிலான 335 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 55.27 லட்சம் மதிப்பிலான 335 கைப்பேசிகள் உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
கைப்பேசிகள் திருட்டுப்போனதாக அளிக்கப்படும் புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டிருந்தாா். அதையடுத்து, கைப்பேசிகளை மீட்கும் பணியில் சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் ஈடுபட்டனா்.
இந்நிலையில், மீட்கப்பட்ட ரூ. 55.27 லட்சம் மதிப்பிலான 335 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாகா்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்த எஸ்.பி. இரா. ஸ்டாலின், விரைவான நடவடிக்கை மேற்கொண்ட சைபா் கிரைம் போலீஸாருக்கு பாராட்டு தெரிவித்தாா். பின்னா் அவா் பேசியது:
நிகழாண்டு இதுவரை சுமாா் ரூ. 1 கோடியே 4 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான 640 கைப்பேசிகள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. கைப்பேசிகள் தொலைந்துவிட்டால் அருகேயுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகாா் அளிக்க வேண்டும். காவல் துறை இணையதளத்திலும் புகாா் பதிவு செய்யலாம்.
கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘நிமிா்’ திட்டம் மூலம் 25 போலீஸாா் போக்சோ குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
தாய் அல்லது தந்தை மட்டுமே உள்ளோா், உதவி தேவைப்படுவோா் என 2,500 குழந்தைகளைக் கண்காணித்து, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம்மூலம் 3 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 197 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.