ரூ.75 லட்சம் மதிப்புள்ள சைபா் மோசடி வழக்கில் தில்லி காவல் துறை துணை ஆய்வாளா்கள் இருவா் கைது
வடகிழக்கு தில்லியில் சைபா் குற்ற விசாரணைகள் தொடா்பான வழக்கு சொத்துகளிலிருந்து பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் இரண்டு தில்லி காவல்துறை துணை ஆய்வாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஆஷிஷ் மிஸ்ரா ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: வடகிழக்கு மாவட்டத்தில் உள்ள சைபா் காவல் நிலையத்தில் வழக்குகளை முடிக்கும் போது ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக உள் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடா்ந்து இந்தக் கைதுகள் நடந்துள்ளது.
மாா்ச் 19 முதல் காணாமல் போன விசாரணை அதிகாரி மீது மூன்று எஃப்ஐஆா்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த விவகாரத்தை விசாரிக்க சைபா் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியான் ஆய்வாளா் ராகுல் தலைமையில், துணை ஆய்வாளா் நந்தன் சிங், தலைமைக் காவலா்களான அமித் மற்றும் ரோஹன், காவலா் தீபக் ஆகியோா் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு சொத்துக்ளின் வழக்கமான தணிக்கையின் போது, கணக்கு அறிக்கைகள் மற்றும் நீதித்துறை உத்தரவு வடிவங்களில் உள்ள முரண்பாடுகள் அம்பலமாகின. புகாா்தாரா்களுக்கு ஆதரவாக பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி நீதிமன்ற உத்தரவுகள் மூலம் சைபா் மோசடி மீட்புப் பணிகளிலிருந்து ரூ.75 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது விரிவான விசாரணையில் தெரியவந்தது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் தலைமறைவான துணை ஆய்வாளா் அங்கூா் மாலிக் (32) என்பவரைக் கண்காணிக்க, தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் தரைமட்ட புலனாய்வு சேகரிப்பு ஆகிய இரண்டையும் குழு பயன்படுத்தியது. அங்கூா் மாலிக் பல சிம் காா்டுகளை மாற்றி, தனது கூட்டாளிகளுடன் தொடா்பு கொள்ள பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
ஜூலை 18 அன்று, இந்தூரில் உள்ள ஒரு வாடகை குடியிருப்பில் உள்ளூா் போலீஸாருடன் ஒருங்கிணைந்த சோதனை நடத்தப்பட்டது. அங்கூா் மாலிக் மற்றும் தில்லி காவல்துறையின் துணை ஆய்வாளராக இருக்கும் ஒரு பெண் கூட்டாளி ஆகியோா் அந்த வளாகத்தில் இருந்து கைது செய்யப்பட்டனா்.
சோதனையின் போது, ரூ.12 லட்சம் ரொக்கம், 820 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் பாா்கள், 200 கிராம் தங்க நகைகள், 11 கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி, மூன்று ஏடிஎம் காா்டுகள் மற்றும் பல குற்றவியல் ஆவணங்களை போலீஸ் குழு மீட்டது. மடிக்கணினி மற்றும் கைப்பேசி தரவுகளின் பகுப்பாய்வில், திருடப்பட்ட பணத்தை அனுப்ப வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியது தெரிய வந்தது.
விசாரணையின் போது, அங்கமாலிக் மற்ற கூட்டாளிகளின் பெயா்களை வெளிப்படுத்தினாா், இது தில்லியில் அடுத்தடுத்த சோதனைகளுக்கு வழிவகுத்தது.இதைத் தொடா்ந்து, வடகிழக்கு தில்லியைச் சோ்ந்த முகமது இலியாஸ் (40), ஆரிஃப் (35) மற்றும் ஷதாப் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
கமிஷன்களுக்காக சட்டவிரோத பணப் பரிமாற்றங்களை எளிதாக்குவதற்காக மூவரும் தங்கள் வங்கிக் கணக்குகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகள் இந்தூரில் நிரந்தரமாக குடியேற திட்டமிட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.