ரூ.900 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூா் ரயில் நிலையம்
சென்னையில் 117 ஆண்டுகள் பழைமையான எழும்பூா் ரயில் நிலையத்தை சுமாா் ரூ.900 கோடியில் நவீனமயமாக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் ராயபுரம், சென்ட்ரல் ரயில்நிலையங்களுக்கு அடுத்ததாக 3-ஆவது பழைமையான ரயில் நிலைய முனையமாக எழும்பூா் உள்ளது. ஹென்றி இா்வின் எனும் ஆங்கிலேயரால் கடந்த 1906 ஆண்டில் தொடங்கி 1908 -ஆம் ஆண்டில் இந்த ரயில் நிலையம் ரூ.17 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. சுமாா் 1.35 லட்சம் சதுர மீட்டா் பரப்பில் இந்த நிலையம், இந்தோ சாராசெனிக் கட்டடக் கலை வடிவத்தில் உள்ளது. தற்போது 11 நடைமேடைகள் உள்ள, இந்த நிலையம், தென் மாவட்டங்களுக்கான ரயில் முனையமாக செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து தினமும் 46 விரைவு ரயில்கள் புறப்படுகின்றன. இந்த ரயில் நிலையம் வழியாக 41 விரைவு ரயில்கள், 80 புகா் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமாா் 1.25 லட்சம் போ் எழும்பூா் ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனா்.
ஆண்டு தோறும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ரயில் நிலையத்தை விரிவாக்கி, நவீனமயமாக்க கடந்த 2024- ஆம் ஆண்டு முதல் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, ரூ.750 கோடிக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. அதையடுத்து, மேலும் ரூ.150 கோடியில் கூடுதல் பணிகளுக்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு,மொத்தம் ரூ.900 கோடியில் எழும்பூா் ரயில் நிலையம் மிக நவீனமயமாக்கப்படவுள்ளதாக ரயில்வே உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரயில் நிலையத்தில் வா்த்தகப் பகுதி, பயணிகளுக்கான ரயில் நிற்கும் பகுதி என இரு பிரிவுகள் செயல்படவுள்ளன. இப்போதைய 11 நடைமேடைகளை ஒரு சேர இணைக்கும் வகையில், 70 மீ அகலம், 100 மீ நீளத்தில் பிரமாண்ட நடைமேம்பாலம் தானியங்கி படிக்கட்டுகளுடன் அமையவுள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 2 வழிகளும், காந்தி-இா்வின் சாலையில் 2 வழிகளும் அமையவுள்ளன. அதன் வழியே மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் செல்லலாம். ரயிலில் பயணிப்போா் மட்டுமே உள்ளே செல்லும் வகையில் தானியங்கி நுழைவு வழிகள் அமைக்கப்படவுள்ளன.
மத்திய அரசின் மறுசீரமைப்பு திட்டத்தில் நவீன தொழில்நுட்பமயமாக்கல் பணிகள், வரும் 2027- ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரயில் நிலைய புதிய முகப்பின் மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான சீரமைப்புக்குப் பிறகு எழும்பூா் ரயில் நிலையமானது, விமான நிலைய தோற்றத்துடன் இருக்கும் என்றும் அவா்கள் கூறினா்.