ரேஷன் கடை பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
திருவாரூா்: பொதுவிநியோகத்திட்டத்துக்கு தனித்துறை அமைக்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அனைத்து ரேஷன் கடைகளிலும் எடையாளா்களை நியமிக்க வேண்டும், டிஎன்சிஎஸ்சி எடைத் தராசையும், ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனையுடன் இணைத்து சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும், ரேஷன் கடைகளுக்கு சேதாரக் கழிவு வழங்க வேண்டும், பொதுவிநியோகத் திட்டத்துக்கென தனித்துறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ரா. குணசீலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.