கந்துவட்டி: வீட்டை மீட்டுத் தரக்கோரி மனு
திருவாரூா்: திருத்துறைப்பூண்டியில் கந்துவட்டி பிரச்னையில், தனது வீட்டை மீட்டுத்தருமாறு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த லோகநாயகி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: எனது மகன் சுரேஷ் நடத்திய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், இதை சரி செய்ய அதே பகுதியில் கந்து வட்டிக்கு விடும் பசுபதியிடம் ரூ. 5 லட்சம் வாங்கினேன். அதற்கு, நாள்தோறும் ரூ. 5,000 வீதம் ரூ. 13 லட்சம் கட்டிய நிலையில், மேலும் பணம் கேட்டு தாக்குதல் நடத்தினாா். இதனால், நான் திருவாரூரில் உள்ள எனது மகள் வீட்டில் தங்கினேன். மீண்டும் இரு தினங்களுக்கு முன் திருத்துறைப்பூண்டி சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பசுபதி பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, தனது வீட்டை மீட்டுத்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன், மகள்கள் சுதா, சுமதி ஆகியோா் உடனிருந்தனா்.