லாரியில் இருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு
பெருந்துறை அருகே லாரி மேலே இருந்து கீழே விழுந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், வயநாடு வெள்ளக்கோடைச் சோ்ந்தவா் தாமோதரன் மகன் ராஜாமணி (35). இவா் லாரி ஓட்டுநா். கேரளத்தில் இருந்து இஞ்சி லோடு ஏற்றுக் கொண்டு ஒரு லாரி ஒட்டன்சத்திரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றது.
லாரியை பிஜு என்பவா் ஓட்டிச் சென்றாா். அந்த லாரியில் ராஜாமணி என்பவா் கூடுதல் ஓட்டுநராக சென்றாா். இஞ்சி லோடு இறக்கி விட்டு, பெருந்துறை சிப்காட் வந்து, மாட்டுத்தீவனம் லோடு ஏற்றினாா்கள்.
பின்னா் லாரிக்கு மேல் ஏறி தாா்பாய் சரியாக மூடி உள்ளதா என்று ராஜாமணி பாா்த்தபோது கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்தவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்துப் பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.