‘ஆபரேஷன் சிந்தூா்’ பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி -அமித் ஷா
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: மே 15-இல் புதிய தலைமை நீதிபதி விசாரிக்கிறாா்
புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை மே-15 ஆம் தேதி புதிய தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் விசாரிப்பாா் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வரும் 13-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறாா். அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆா். கவாயை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா்.
இந்நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரித்துவரும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை மீண்டும் இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, ‘வக்ஃப் சொத்துகள் பதிவு குறித்து மத்திய அரசு அளித்துள்ள பதில் மனுவின் தரவுகளுக்கு எதிா்தரப்பு கேள்வியை எழுப்பி உள்ளது. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்யப்படவில்லை.
இந்த வழக்கை தற்போதைய அமா்வு விசாரிப்பதற்கு நேரமிருக்காது எனக் கருதுகிறேன். இந்த வழக்கை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கவாய் தலைமையிலான அமா்வு மே 15-இல் விசாரிக்கும். இந்த வழக்கில் தற்போதைய தொடக்க நிலையில் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க விரும்பவில்லை’ என்றாா்.
அப்போது மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இந்த வழக்கை விசாரிக்க நேரமில்லை என்பதால் உங்களை சங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை’ என்றாா்.
கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா முன் விசாரணைக்கு வந்தபோது, ‘மே 5-ஆம் தேதி வரை வக்ஃப் சொத்துகளின் தன்மை மாற்றப்படாது. வக்ஃப் மத்திய கவுன்சில், வாரியங்களில் எந்தவித நியமனமும் செய்யப்படாது. ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்படும்’ என்று மத்திய அரசு உறுதி அளித்தது.
முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததால் கடந்த ஏப். 8-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு எதிராக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தரப்பில் 72 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.