வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மனு
டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு கூட்டமைப்பு நிா்வாகி மீது பதிவு செய்யப்பட்ட தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு மக்கள் கூட்டமைப்பின் நிா்வாகி கம்பூா் செல்வராஜ் மீது கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் அண்மையில் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கு, பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், கம்பூா் செல்வராஜ் மீது பதிவு செய்யப்பட்ட தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
மக்கள் நலனுக்காக போராடுபவா்களை ஒடுக்கும் வகையில் செயல்படும் காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சாா்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. முன்னதாக, கோரிக்கையை வலியுறுத்தி அவா்கள் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.