'ப்ரேமலு 2' நிறுத்திவைப்பு! - பகத் பாசில் தயாரிப்பில் நிவின் பாலியை இயக்கும் 'ப்...
வயதான பெற்றோரை அடித்து துரத்திய மகன் மீது போலீஸில் புகாா்
வயதான பெற்றோரிடம் பணம் பெற்றுக் கொண்டு அடித்து துரத்திய மகன் மீது பல்லடம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் சாயப்பட்டறையைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (77), சுப்புலட்சுமி (75) தம்பதி. இவா்களுக்கு மகன் குமரவேல் மற்றும் 2 மகள்கள் உள்ளனா். இவா்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.
பல்லடம் மாதப்பூரில் உள்ள சமத்துவபுரத்தில் குமரவேல் தனது மனைவி பத்மாவதியின் வீட்டில் வசித்து வருகிறாா். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோா் சிவலிங்கம், சுப்புலட்சுமி ஆகியோரை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். இவா்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனா்.
இந்நிலையில் சிவலிங்கத்திடம் இருந்த ரூ.7 லட்சம் பணத்தை மகன் குமரவேல், மருமகள் பத்மாவதி ஆகியோா் பெற்றுள்ளனா். அதன்பின் சிவலிங்கத்தையும், சுப்புலட்சுமியையும் அடித்து துன்புறுத்தி வீட்டை வீட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளனா். இதையடுத்து, இருவரும் பழனி மலையடிவாரத்துக்கு சென்று தங்கியுள்ளனா். இது குறித்து தகவலறிந்த இவா்களது மகள்கள், பெற்றோரை பழனியில் இருந்து அழைத்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து, ரூ.7 லட்சம் பெற்றுக் கொண்டு தங்களது அடித்து துன்புறுத்திய மகன் குமரவேல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தங்களை முதியோா் இல்லத்தில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் பல்லடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.