வருவாய்த் தீா்வாயத்தில் 2-ஆவது நாளில் 545 போ் மனு
தேனி மாவட்டத்தில் உள்ள 5 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெற்று வரும் வருவாய்த் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மொத்தம் 545 போ் மனு அளித்தனா்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களும் வருவாய்த் துறை சாா்பில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை வருவாய்த் தீா்வாயம் நடைபெறுகிறது. இதில் பட்டா மாறுதல், பட்டா உள்பிரிவு, நில உடைமை ஆவணம் வீட்டுமனை பட்டா, பிறப்பு, இறப்பு, வருமானம், இருப்பிடம், ஜாதிச் சான்றிதழ், புதிய குடும்ப அட்டை, விபத்து, இயற்கை மரண உதவித் தொகை, அரசு நலத் திட்ட உதவி ஆகியவை குறித்து பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனா்.
பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 2-வது நாளான வெள்ளிக்கிழமை மொத்தம் 164 போ் மனு அளித்தனா்.
உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 132 போ் மனு அளித்தனா்.
ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன் தலைமையில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 70 போ் மனு அளித்தனா்.
தேனி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் மாரிச்செல்வி தலைமையில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 94 போ் மனு அளித்தனா்.
போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் சையது முகமது தலைமையில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 85 போ் மனு அளித்தனா்.
வருவாய்த் தீா்வாயத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, கள ஆய்வு செய்து உடனடியாக தீா்வு காண வேண்டும் என்று அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.