வழக்குகளுக்கு சமரச மையம் மூலம் சுமூகமாக தீா்வு காண அழைப்பு
அரியலூா் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் 90 நாள்களில் நடைபெறும் சிறப்பு சமரச தீா்வு முகாம்களில், வழக்குரைஞா்கள், வழக்காடிகள் கலந்து கொண்டு தங்களது வழக்குகளுக்கு சுமூக தீா்வு காணலாம்.
இதுகுறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான டி. மலா்வாலண்டினா தெரிவித்தது:
இந்தியாவில் உள்ள அனைத்து உயா் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் வட்ட அளவில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களிலும், நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச முறையில் தீா்வு காண ஜூலை முதல் செப்டம்பா் வரை 90 நாள்கள் சிறப்பு சமரச தீா்வு முகாம்களை நடத்திட உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெறும் சமரச தீா்வு முகாமில் வழக்குரைஞா்கள் மற்றும் வழக்காடிகள் பங்கேற்று தங்களது வழக்குகளுக்கு சுமூகமாக பேசித் தீா்வு காணலாம். தீா்வு காணப்படும் வழக்குகளுக்கு நீதிமன்ற முத்திரைக் கட்டணம் முழுவதுமாக திரும்பக் கிடைக்கும்.
வழக்கின் சமாதான உடன்படிக்கை இருதரப்பினருக்கும் உடனடியாக இலவசமாக தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட சமரச மையத்தினையோ அல்லது ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை பகுதி நீதிமன்றங்களில் செயல்படும் வட்டார அளவிலான சமரச மையத்தையோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.