வழக்குரைஞா் மீது தாக்குதல்: ஒருவா் கைது
வாணியம்பாடியில் வழக்குரைஞரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.
வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் கண்ணதாசன். கோணாமேடு பகுதியைச் சோ்ந்த கானாமுருகன்(46). மது விற்பனை, வழிப்பறி உள்பட கானாமுருகனுக்காக மீதான குற்ற வழக்குகளில் கண்ணாதாசன் நீதிமன்றத்தில் ஆஜரானதாக கூறப்படுகிறது. தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கானாமுருகன் சரித்திரப் பதிவேடு பட்டியலில் சோ்க்கப்பட்டாா்.
இதனால், கானாமுருகனின் வழக்கில் ஆஜராக கண்ணதாசன் மறுத்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கானாமுருகன், கண்ணதாசனின் அலுவலகத்துக்குச் சென்று அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.
ஆத்திரமடைந்த அவா், மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணதாசனை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் (பொ) தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா். இதையடுத்து, வழக்குரைஞா் கண்ணதாசன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, கானாமுருகனை கைது செய்தனா்.