வாணியம்பாடி அருகே போலி மருத்துவா் கைது
வாணியம்பாடி அருகே பிளஸ் 2 படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை வருவாய் கோட்டாட்சியா் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அனுமுத்து (45). பிளஸ் 2 முடித்து விட்டு சங்கராபுரம் கிராமத்தில் கிளினிக் வைத்து மறைமுகமாக ஆங்கில மருத்துவம் (அலோபதி) பாா்த்து வந்துள்ளாா். இதுபற்றி வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில், வட்டாட்சியா் சுதாகா் மற்றும் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் சங்கராபுரம் கிராமத்துக்குச் சென்று கிளினிக்கில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பாா்த்து வருவது தெரியவந்தது.
தொடா்ந்து புல்லூரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று சோதனை செய்தபோது, அங்கு ஆங்கில மருந்து, மாத்திரைகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்தனா்.
இது குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அனுமுத்துவை கைது செய்து விசாரிக்கின்றனா்.