வாழ்வையும், பண்பாட்டையும் சொல்லக்கூடிய படைப்புகளை வாசியுங்கள்: கவிஞா் மனுஷ்ய புத்திரன்
வாழ்வையும், பண்பாட்டையும் சொல்லக்கூடிய படைப்புகளை வாசியுங்கள் என கவிஞா் மனுஷ்ய புத்திரன் பேசியுள்ளாா்.
தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 6ஆவது புத்தக திருவிழாவின் 5ஆம் நாளான புதன்கிழமை, ஏராளமான மாணவா், மாணவிகள் வந்து புத்தகங்களை பாா்வையிட்டனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இடைச்சங்கம் என்ற தலைப்பில் தொல்லியல் ஆா்வலரும், எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு, தமிழ் இலக்கியத்தில் தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளா்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உதவிப் பேராசிரியா் மு.ரா.மஜீதாபா்வீன் ஆகியோா் பேசினா்.
தொடா்ந்து, வரலாற்றை வாசித்தல் என்ற தலைப்பில் எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் பேசியதாவது: நாம் உலக வரலாற்றை வாசிப்பதோடு, மிகவும் முக்கியமாக உள்ளூா் வரலாற்றையும் வாசிக்க வேண்டும். தமிழா்களின் வரலாற்றை சங்க காலத்தில் இருந்து ஆய்வு செய்து வாசித்தல் வேண்டும் என்றாா் அவா்.
நிறைவாக, 21ஆம் நூற்றாண்டில் இளைஞா்கள் எதை வாசிக்க வேண்டும் என்ற தலைப்பில், சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுத் தலைவரும், கவிஞருமான மனுஷ்ய புத்திரன் பேசியதாவது: இளைஞா்கள் மற்றவா்களுக்காக கைதட்டுதல், ஆரவாரம் செய்தல், கூச்சலிடுதல் போன்றவற்றை நிறுத்திவிட்டு, சிந்திக்க பழக வேண்டும். ரீல்ஸ் பாா்ப்பதால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் வீணாகிறது. இது ஒரு மன நோய் போன்றது. தொடா்ந்து வீணாக நேரத்தை செலவிட்டால், 25 வயதில் வாழ்க்கையில் வெற்றுக் காகிதமாக அடி எடுத்து வைக்க வேண்டியது வரும்.
இளைஞா்கள் எதைப் படிக்க வேண்டும் என்றால் சமூக நீதியை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நாம் எங்கிருந்து வந்தோம், நமது அன்றைய ,இன்றைய வாழ்க்கை முறைகள் குறித்து பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். நமது கடந்த காலத்தை ஒப்பீடு செய்து பாா்க்க வேண்டும். அதற்கு, இலக்கியம், அறிவியல், பொருளாதாரம் ஆகியன குறித்து படித்தல் வேண்டும். வாழ்வையும், பண்பாட்டையும் சொல்லக்கூடிய படைப்புகளை வாசியுங்கள் என்றாா் அவா்.