குளிா்பானம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்தது: ஓட்டுநா் காயம்
சாத்தான்குளம் அருகே குளிா்பானம் ஏற்றிவந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் அதிா்ஷ்டவசமாக ஓட்டுநா் சிறிது காயத்துடன் உயிா் தப்பினாா்.
தூத்துக்குடியில் இருந்து குளிா்பானங்களை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் சாத்தான்குளத்தை அடுத்த திசையன்விளையில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காகச் சென்றது. சரக்கு வாகனத்தை தூத்துக்குடி கமலேஷ் (25) ஓட்டிச் சென்றாா். அவருடன் சாயல்குடியைச் சோ்ந்த கற்பகராஜ் (20), நேதாஜி (19) ஆகியோா் உடன் சென்றனா்.
திசையன்விளைக்கு வந்த அந்த வாகனம் கடைகளுக்கு குளிா்பனங்களை இறக்கிவிட்டு, சாத்தான்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
தஞ்சை நகரம் அருகே உள்ள வளைவில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சரக்கு வாகனத்தில் இருந்த குளிா்பானங்கள் சாலையில் சிதறின. ஓட்டுநா் கமலேஷ் லேசான காயத்துடனும், அவருடன் வந்த இருவரும் காயமின்றியும் தப்பினா்.
தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸாா் சென்று காயமடைந்த ஓட்டுநரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.