ஷுப்மன் கில் தமிழராக இருந்திருந்தால்...: பத்ரிநாத் விமர்சனம்!
விக்கிரவாண்டி: `செப்டிக் டேங்க்கில் விழுந்து குழந்தை இறக்கவில்லை’ - உறவினர்கள் எழுப்பும் கேள்விகள்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வரும் இவர், தன்னுடைய மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமியை விக்கிரவாண்டியில் இருக்கும் செயிண்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் சேர்த்திருக்கிறார். எல்.கே.ஜி படித்து வந்த லியா லட்சுமியை இன்று காலை வழக்கம்போல பள்ளியில் விட்டுச் சென்றிருக்கிறார் பழனிவேல். அதேபோல மாலை வழக்கம்போல குழந்தை லியா லட்சுமியை அழைக்கச் சென்ற பெற்றோரிடம், குழந்தை செப்டிக் டேங்கில் விழுந்து இறந்துவிட்டதாகவும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டிருக்கிறது.
அதைக் கேட்டு அதிர்ந்து போன குழந்தையின் பெற்றோர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு சடலமாக கிடந்த லியா லட்சுமியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். அதையடுத்து பள்ளியை முற்றுகையிட்ட குழந்தையின் உறவினர்கள். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து அங்கு வந்த போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், ``பள்ளியில் மதிய உணவுக்குப் பிறகு கழிவறைக்குச் சென்ற குழந்தை லியா லட்சுமி, அங்கிருந்த செப்டிக் டேங்க் மீது ஏறியிருக்கிறது. அந்த செப்டிக் டேங்க் மூடி துருப்பிடித்து இருந்ததால் உடைந்து குழந்தை உள்ளே விழுந்து விட்டது.
கழிவறைக்குச் சென்ற குழந்தை வராததால், அந்த ஆசிரியை குழந்தையை தேடிப் போனார். கழிவறையில் குழந்தை இல்லாததால் அதை சுற்றி தேடிப் பார்த்திருக்கிறார். அப்போது செப்டிக் டேங்க் மூடி உடைந்திருந்ததால் அங்கு சென்று பார்த்திருக்கிறார். அப்போது குழந்தை அதற்குள் கிடந்ததால், மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினோம்” என்று போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறது பள்ளி நிர்வாகம். அதேசமயம், ``குழந்தையை காணவில்லை என்றால் உடனே தேடிப்பார்க்க வேண்டும்தானே ? ஆசிரியர்கள் எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருப்பார்கள் ? அதேபோல குழந்தையை காணவில்லை என்று பெற்றோருக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை ? மாலை 4 மணிக்கு குழந்தையை பெற்றோர் அழைத்து வர சென்றபோது, `லியா லட்சுமி எங்கே?’ என்று கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் அப்போது போலீஸாரும், வருவாய் துறையினரும் பள்ளிக்கு வந்திருக்கிறார்கள். அப்படி என்றால் குழந்தை இறந்துவிட்டது என்று பள்ளி நிர்வாகத்துக்கு தெரியும். அதனால்தானே போலீஸாரை அழைத்திருக்கிறார்கள். ஆனால் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த பள்ளி நிர்வாகம், அவ்வளவு நேரமாகியும் பெற்றோருக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. 2,000 பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் பாதுகாப்பு என்பது பேச்சுக்குக் கூட இல்லை. சுற்றுச் சுவர் போடாமல், வேலியை போட்டு வைத்திருக்கிறார்கள். இத்தனை குழந்தைகள் படிக்கும் இடத்தில் செப்டிக் டேங்க்கை இந்த அளவுக்கா வைத்திருப்பார்கள் ?
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் 6 மாதத்திற்கு ஒரு முறை பள்ளியை வந்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதே இல்லை. அதேபோல குழந்தையை இவர்களே தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த உடைந்த மூடி வழியாக ஒரு ஆள் உள்ளே சென்று வர முடியாது. அதேபோல செப்டிக் மூடிக்குப் பக்கத்தில் கிடந்த குழந்தையின் உள்ளாடையில் தண்ணீரில் நனைந்ததற்கான அடையாளமே இல்லை. எங்கள் குழந்தை செப்டிக் டேங்க்கில் விழுந்து இறக்கவில்லை. இவர்களை எதையோ மறைக்கிறார்கள். எங்கள் குழந்தைக்கு நீதி வேண்டும். இந்த வழக்கில் மெத்தனமாக நடந்து கொண்ட கல்வித்துறை அதிகாரிகளையும் சேர்க்க வேண்டும்.” என்று குமுறுகிறார்கள்.
அதேசமயம் செப்டிக் டேங்க்கிலிருந்து குழந்தையை நான்தான் தூக்கிச் சென்றேன் என்றும் கூறும் பள்ளியின் ஓட்டுநர் கோபால், ``குழந்தையை காணோம் என்று ஆசிரியைகள் கூறியதால் நான் ஓடிச் சென்றேன். அப்போது செப்டிக் டேங்க் மூடி உடைந்திருக்கிறது என்று அவர்கள் கூறியதால் அதற்குள் எட்டிப் பார்த்தேன். அங்கு குழந்தையின் ஷூ தெரிந்தது. அதன்பிறகு கம்பி மூலம் குழந்தையின் ஆடையை பிடித்து மேலே தூக்கினேன்” என்றவரிடம், `குழந்தையின் உள்ளாடை ஈரமாகவே இல்லை. அதேபோல குழந்தையின் உடலிலும் எந்த காயங்களும் இல்லையே ?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கம்பி மூலம் குழந்தையின் ஆடையில் மாட்டித்தான் குழந்தையை மேலே தூக்கினேன். அதனால்தான் உடலில் எந்த காயங்களும் இல்லை. அதன்பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்” என்றார்.