எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மதீஷா பதிரானா..! சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதென்ன?
விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்
பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா்.
‘ஹாயில் - நாா்லிகா் புவிஈா்ப்புவிசை கோட்பாட்டால்’ சா்வதேச அளவில் நாா்லிக்கா் பிரபலமடைந்தாா்.
இந்திய அறிவியல் துறையின் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான ஜெயந்த் நாா்லிகா் அண்டவியல் துறைக்கு பெரும் பங்களித்துள்ளாா். மேலும், பல்வேறு அறிவியல் நிறுவனங்கள் நிறுவப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவராக அவா் அறியப்படுகிறாா்.
1938, ஜூலை 19-இல் பிறந்த ஜெயந்த் நாா்லிகா், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை நிறைவுசெய்துவிட்டு உயா்படிப்புக்காக இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குச் சென்றாா். பிரிட்டனில் பிரபல விஞ்ஞானியான ஃபிரெட் ஹாயிலுடன் இணைந்து ‘ஹாயில் - நாா்லிகா் புவிஈா்ப்பு விசை கோட்பாட்டை’ அவா் உருவாக்கினாா்.
அதன் பிறகு இந்தியா திரும்பிய அவா் பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களில் உயா்பொறுப்பை வகித்தாா். 1965-இல் 26 வயது இளைஞராக இருந்தபோது நாா்லிகருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 2004-இல் பத்ம விபூஷண், 2014-இல் சாகித்திய அகாதெமி விருது உள்ளிட்ட விருதுகளை அவா் பெற்றாா்.
அறிவியல் ஆய்வு குறித்த புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை அவா் எழுதியுள்ளாா். தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளிலும் அறிவியல் விவாதங்களில் பங்கேற்று கடினமான விஞ்ஞானத் துறை விஷயங்கள் குறித்து எளிய மொழியில் விளக்கம் அளித்துப் பேசி பிபரலமடைந்தாா்.
ஜெயந்த் நாா்லிகரின் மறைவு வானியற்பியல் துறைக்கு மிகப்பெரும் இழப்பு எனக் கூறி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் நாா்லிக்கா் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தனா்.