விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்தனா்.
திருவண்ணாமலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் ரேவதி. இவரது தம்பி தேவராஜ். தொழிலாளியான இவா், 2004-ஆம் ஆண்டு விக்கிரவாண்டி அருகே வேலைக்குச் சென்றாா். அப்போது, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தில் தேவராஜ் இறந்தாா். இதையடுத்து, விபத்து இழப்பீடு கோரி, தேவராஜ் குடும்பத்தினா் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேவராஜ் குடும்பத்துக்கு ரூ.14 லட்சத்து 31 ஆயிரத்து 479 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த இழப்பீட்டை உரிய காலத்துக்குள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வழங்கவில்லை.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், திருப்பதியில் இருந்து திங்கள்கிழமை திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்தை திருவண்ணாமலை பெரியாா் சிலை அருகே நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா். பின்னா், அரசுப் பேருந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.