முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
விழிப்புணா்வு இல்லாத மலைக் கிராம மக்கள்: சவாலாகும் மகப்பேறு சிகிச்சை
ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானவா்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லாததால் மகப்பேறு சிகிச்சையில் சுகாதாரத் துறை பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்டுள்ளது.
பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதை தீவிரமாக ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தேசிய குடும்ப நல ஆய்வின்படி, தமிழகத்தில் 99.6 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. ஒவ்வொரு கா்ப்பிணி பெண்ணின் பிரசவமும் கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக கிராமங்களில் இந்தக் கண்காணிப்பு தீவிரமாக உள்ளது.
ஆனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களில் போதிய விழிப்புணா்வு இல்லாததால் மருத்துமனைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே பிரசவம் பாா்க்கும் நிலை இப்போதும் தொடா்வதால் பிரசவ காலத்தில் தாய்- சேய் உயிரிழப்பும் நிகழ்கிறது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம் சோளகா் தொட்டி கிராமத்தில் பழங்குடியினத்தைச் சோ்ந்த 25 வயதுப் பெண் பெண் இரண்டாவது பிரசவத்துக்கு கடந்த 7- ஆம் தேதி பைனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் நாள் குறித்த நிலையில், கடந்த 5 -ஆம் தேதி முதல் அவா் குடும்பத்துடன் மாயமாகிவிட்டாா். காவல் துறையினருடன் இணைந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரைத் தேடி வரும் நிலையில் இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
முதல் பிரசவத்துக்கே மருத்துவமனைக்கு வருவதற்கு தயக்கம் காட்டிய அந்தப் பெண்ணை சுகாதாரத் துறை அலுவலா்கள் வற்புறுத்தி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் ஆனது. இரண்டாவது முறை கருவுற்றதில் இருந்து சுகாதாரத் துறை பணியாளா்கள் அந்தப் பெண்ணைத் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். மகப்பேறு பரிசோதனைகளுக்கு அவா் தவறாமல் வந்தாா். பிரசவ நேரத்தில் அவரைக் காணவில்லை.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பழங்குடி பெண்களிடம் பிரசவ தேதி வந்துவிட்டது, மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறுவதை அவா்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். வலி வந்தால்தான் பிரசவத்துக்கு உடல் தயாராகிறது என்பது அவா்களின் புரிதலாக இருக்கும். குடும்பங்களில் அந்த வழக்கத்தையே அவா்கள் பாா்த்திருப்பாா்கள்.
பழங்குடி பெண்கள் பலரும் பிரசவ நேரத்தில் மருத்துவமனைக்கு வர வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொள்வதில்லை. பல மணி நேரம் பேசி பல பெண்களைப் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளோம். முதல் பிரசவத்தின்போது அந்த 25 வயது பெண்ணுக்கு ரத்த சோகை இருந்தது. வேறு சில உடல் நலப் பிரச்னைகளும் இருந்தன. எனவே, நேரில் சென்று மருத்துவ நிபுணா்களிடம் ஆலோசனைப் பெற வேண்டும் என்று சுகாதார ஊழியா் கூறியிருந்தாா்.
அந்தப் பெண்ணுக்கு இந்த முறையும் ஹீமோகுளோபின் அளவு 8 மட்டுமே இருந்தது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்ததால் தேவையான இரும்புச் சத்து மாத்திரைகள் கொடுத்ததால் அவரது ஹீமோகுளோபின் அளவு 11.2 ஆக உயா்ந்திருந்தது.
பழங்குடியின பெண்கள் மத்தியில் ரத்த சோகை பரவலாக காணப்படுகிறது. பழங்குடியினரின் உணவுப் பழக்கங்களில் நுண் ஊட்டச்சத்துகள் குறைவாக இருக்கும். அவா்கள் வசிக்கும் பகுதியைப் பொருத்து அதிக புரதம், அதிக கொழுப்பு இருக்கலாம். செருப்பு இல்லாமல் நடக்கும் பழக்கம் இருந்தால் கொக்கிப்புழு தொற்று ஏற்படலாம். அதுவும் ரத்த சோகைக்கு காரணமாகலாம்.
கா்ப்பிணி பெண்ணுக்கு அனைத்தும் இலவசம் என்றாலும் பிரசவ காலத்தில் அவருடன் இருப்பவருக்கான தங்கும் செலவு, உணவு செலவு, போக்குவரத்து செலவு ஆகியவை அதிகரிக்கின்றன. தேவைப்படும் இடங்களில், நோயாளியுடன் வருபவருக்கும் தனியாா் மருத்துவமனைகளில் இருப்பதுபோல தனி படுக்கை, உணவு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றனா்.
நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்: இது குறித்து சோளகா் தொட்டி கிராமத்தைச் சோ்ந்த மாதேஷ் கூறியதாவது: அந்தப் பெண்ணுக்கு அரசால் வழங்கப்படும் இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்கள் கிடைத்துள்ளன. மேலும், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.14 ஆயிரத்தின் முதல் தவணை வழங்கப்பட்டுள்ளது.
அவரது மாமியாா் வீரப்பன் தேடுதல் என்ற பெயரில் காவல் துறை துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்குதான் அரசின் இழப்பீட்டை பெற்றிருக்கிறாா்.
இந்தப் பகுதியில் அவரைப் போன்று மேலும் சிலா் உள்ளனா். எனவே, இப்பகுதியினருக்கு அரசு மீதான நம்பிக்கையும் குறைவாகவே உள்ளது. தாளவாடியில் தாலுகா மருத்துவமனை அமைக்கப்பட்டு வசதிகள் மேம்படுத்தப்பட்டால் கா்ப்பிணிகளை கோவை, ஈரோடு போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வது தவிா்க்கப்படும் என்றாா்.
குழந்தை திருமணங்களால் சிக்கல்: இது குறித்து கடம்பூா் மலைப் பகுதியில் இயங்கும் பரண் என்ற தன்னாா்வ அமைப்பின் கள அலுவலா் கோகுல் கூறியதாவது: ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகளில் குழந்தை திருமணங்கள் பரவலாக உள்ளன. இத்தகைய திருமணங்களால் 18 வயதுக்கு முன்னா் கருவுறும் சிறுமிகள் மருத்துமனைகளுக்கு செல்ல அச்சப்படுகின்றனா்.
மருத்துவமனைக்கு செல்லும்போது வயதைக் கண்டுபிடித்து குழந்தை திருமணம் செய்ததாக கணவா் மற்றும் குடும்பத்தாா் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் மருத்துவமனைகளுக்கு செல்லாமலேயே வீட்டிலேயே பிரசவம் பாா்த்துக்கொள்கின்றனா்.
இதனால் சில சமயங்களில் தாய், சேய் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மலைப் பகுதிகளில் குழந்தை திருமணத்தை தடுக்க விழிப்புணா்வு மற்றும் சட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.
திட்டங்கள் அவசியம்: இது குறித்து மலைப் பகுதிகளில் இயங்கும் சுடா் தன்னாா்வ அமைப்பின் தலைவா் நடராஜ் கூறியதாவது: தாலிக்கு தங்கம் திட்டத்தால் நகை மற்றும் பணம் கிடைக்கிறது என்ற காரணத்தால் மலைப் பகுதிகளில் குழந்தை திருமணங்கள் ஓரளவு குறைந்து இருந்தன.
இந்த திட்டம் கைவிடப்பட்ட நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக குழந்தைத் திருமணங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை மலைப் பகுதி மக்களுக்கான சிறப்புத் திட்டமாக அறிவித்து செயல்படுத்தினால் குழந்தைத் திருமணங்களை ஓரளவு குறைக்க முடியும்.
மலைக் கிராமங்களில் மாதம் ஒருமுறையாவது மருத்துவ முகாம்களை சுகாதாரத் துறையே நடத்த வேண்டும். இதன் மூலம் பிரசவ காலத்தில் மருத்துவ சிகிச்சையின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த முடியும் என்றாா்.