சென்னையில் ரசாயனம் கலந்த தா்பூசணி இல்லை: உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்
விழுப்புரம்: 1300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பல்லவர் காலத்து சிற்பங்கள் கண்டெடுப்பு; ஆய்வாளர் சொல்வதென்ன?
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே முன்னூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளரான கோ.செங்குட்டுவன் மார்ச் 27ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வரலாற்று சிறப்புமிக்க ஆடவல்லீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டதில், சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழம்பெரும் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து நம்மிடம் பேசிய ஆய்வாளர் செங்குட்டுவன், ``தற்போதெல்லாம் தொழில்நுட்ப வசதிகள் கொண்டு கையடக்க பிரதிகள் ஏராளமாக வந்துவிட்டன. ஆனால் 1,300 ஆண்டுகளுக்கு முன்பே எந்த ஒரு தொழில்நுட்ப வசதிகளும் இன்றி கையடக்க சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருப்பது, மிகவும் வியப்பளிக்கிறது.

1973 ஆம் ஆண்டில் தமிழக அரசின் தொல்லியல் துறை இயக்குநரான நாகசாமியால் வெளியிடப்பட்ட 'தமிழகம் damilica' எனும் நூலில் முன்னூர் கிராமத்தின் சிற்பங்கள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இவை எங்கு இருக்கிறது என இது நாள் வரை யாரும் அறியவில்லை. மிகவும் பழமைவாய்ந்த மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலுக்கு ஆன்மிக எழுத்தாளரான கோ.ரமேஷ் மற்றும் இல.வேணுகோபால் ஆகியோருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது இரண்டு சிற்பங்கள் கோயில் அர்ச்சகர்கள் பாதுகாப்பில் இருந்தது தெரிய வந்தது. இந்தச் சிற்பங்கள் கையடக்க அளவில் மிகவும் சிறியதாகவும் நுட்பமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை தமிழின் கலை நுட்பத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கிறது. ஜேஷ்டா தேவியின் வழிபாடு தமிழகத்தின் மிகவும் தொன்மை வாய்ந்த தாய் தெய்வ வழிபாடாகும். செல்வம், வளமை, தாய்மை ஆகியவற்றின் குறியீடாக ஜேஷ்டா தேவி பார்க்கப்படுகிறார். பலகை கல்லில் வடிக்கப்பட்ட இவரின் சிற்பங்கள் வட தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக காணப்படுகிறது. பொதுவாக இந்த சிற்பங்களில் அவரது மகன் மாந்தன், மகள் மாந்தி, காக்கை கொடி, கழுதை வாகனம் மற்றும் செல்வக்குடம் ஆகியவை காணப்படும்.

ஆனால் முன்னுரில் அமைந்துள்ள ஜேஷ்டா தேவியின் சிற்பம் வழக்கமான பெரிய அளவிலான பலகை கல்லில் வடிக்கப்படாமல், கையில் அடக்கக்கூடிய சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாந்தன் மற்றும் மாந்தி உருவப்படங்கள் மட்டுமல்லாது கூடுதலாக மூன்று பேர் அமைந்துள்ளனர். இவற்றில் இரண்டு நபர் வணங்கிய நிலையிலும் அமைந்துள்ளனர். பெரும்பாலான ஜேஷ்டா தேவியின் சிற்பங்களில் காக்கை கொடி பொருத்தப்பட்டிருக்கும் . ஆனால் இவற்றில் அவை காணப்படவில்லை.
இந்த சிற்ப தொகுப்பில் பிரம்மா, சிவன் ,பார்வதி ,முருகன், நரசிம்மர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சிவனின் உருவம் லிங்கமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பொதுவாக பல்லவர் காலத்து சிற்பங்களின் முருகன் குழந்தை வடிவமான சோமஸ்கந்தராக அருள் பாலிப்பார். ஆனால் இவற்றில் சற்றே வளர்ந்த வாலிபர் முருகனாக காட்சியளிக்கிறார். புராணங்களின் அடிப்படையில் கிபி 6-7ம் நூற்றாண்டினை சேர்ந்த பழைமைவாய்ந்த பல்லவர் காலத்து சிற்பங்களாக இவற்றில் ஒரே இடத்தில் ஒரே குடும்பமாக ஒரே சிற்பத்தில் அழகுற காட்சியளிப்பது வியப்பளிக்கிறது" என ஆச்சர்யத்துடன் கூறினார்.