ADMK DMK Gingee Fort: சாகும் வரை சிறை Vs ஆயுள் தண்டனை - என்ன வித்தியாசம்? | Impe...
விஷம் கொடுத்து மகளை கொன்று தந்தை தற்கொலை
பழனி அருகே மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பழனி அருகே கணக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வசித்து வந்தவா் பழனிச்சாமி (62). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மகன், மகள், மனைவி உள்ளனா். இதில் மகனுக்கு திருமணமாகி தனியே வசித்து வருகிறாா். சனிக்கிழமை பழனிச்சாமியின் மகனும், மனைவியும் திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்றுவிட்டனா்.
வீட்டில் பழனிச்சாமியும், அவரது மகள் தனலட்சுமியும் (23) மட்டும் இருந்தனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பழனிச்சாமியின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினா் உள்ளே பாா்த்தனா். அப்போது பழனிச்சாமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தனலட்சுமி இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து அங்கு வந்த ஆயக்குடி போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக கொண்டு சென்றனா். அப்போது தனலட்சுமிக்கு புதிய சேலை அணிவிக்கப்பட்டு முகத்தில் மஞ்சள் பூசி பூ வைக்கப்பட்டிருந்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழனிச்சாமி, மகள் தனலட்சுமிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவருக்கு புதிய ஆடைகள் அணிவித்து பிறகு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸாா் கருதுகின்றனா். மேலும் அவா் எதற்காக மகளை கொலை செய்தாா் என விசாரிக்கின்றனா்.