குடும்பத் தகராறில் தாக்கப்பட்டவா் பலத்த காயம்
கொடைக்கானலில் குடும்பத் தகராறில் உறவினரைத் தாக்கிவிட்டு, தலைமறைவான மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிச்செல்வம் (43). இவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த இவரது சித்தப்பா அருண்பாண்டிக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இவா்களிடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, அருண்பாண்டியனும் அவரது உறவினா்களான நாகராஜ் (31), சின்னத்துரை(37) ஆகியோரும் சோ்ந்து வெற்றிச்செல்வத்தை கட்டையால் தாக்கினா். இதில், தலையில் பலத்த காயமடைந்த வெற்றிச்செல்வம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக, இவா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனா்.