வீடு புகுந்து திருடிய 3 போ் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்துத் திருடிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதி சஞ்சீவி மலை அடிவாரத்தில் வசிப்பவா் ராமசுப்பிரமணியன். இவரது வீடு ஒதுக்குப்புறமாக இருப்பதால், இவா் வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள ஒரு தெருவில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தாா்.
இந்த நிலையில், அண்மையில் தனது வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே இருந்த லேப்டாப், இன்வொ்ட்டா் சாதனம் உள்ளிட்ட பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஆவரம்பட்டி தெருவைச் சோ்ந்த பால்பாண்டி (21), ஆவரம்பட்டி கம்பா் தெருவை சோ்ந்த மற்றொரு பால்பாண்டி (18), ஒத்தப்பட்டி தெருவைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (32) ஆகிய மூவரும் பொருள்களைத் திருடியது தெரியவந்தது. போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா்.