வீடு புகுந்து நண்பரை வெட்டிக் கொன்ற வழக்கு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் வீடு புகுந்து நண்பரை வெட்டிக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு வியாழக்கிழமை இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆய்க்குடி காவல் சரகத்துக்குள்பட்ட கம்பிளி தெற்குத் தெருவைச் சோ்ந்த வேல்சாமி-முப்பிடாதி தம்பதியின் மகன் தேவா என்ற மகாதேவன் (25). அதே ஊா் பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் அழகையா மகன் மகாதேவன் என்ற வரிப்புலி (25). நண்பா்களாக இருந்த இவா்களிடையே சிறுசிறு பிரச்னைகளால் முன்விரோதம் ஏற்பட்டதாம்.
கடந்த 2021 ஜூன் 19ஆம் தேதி தேவா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, மகாதேவன் என்ற வரிப்புலி அவரது வீடு புகுந்து அரிவாளால் வெட்டினாா். இதில், தேவா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மகாதேவனை தேவாவின் பெற்றோரும் சகோதரரும் பிடிக்க முயன்றனா். அவா்களுக்கு மகாதேவன் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினாா். ஆய்க்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, மகாதேவனைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி மனோஜ்குமாா் வியாழக்கிவமை விசாரித்து, மகாதேவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, தேவாவின் பெற்றோா்-சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக 7ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துத் தீா்ப்பளித்தாா்; தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் மாவட்ட வழக்குரைஞா் சு. வேலுச்சாமி ஆஜரானாா்.