வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
சின்னசேலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வி.கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் செல்வம் (49). தனியாா் நிறுவனத்தில் கால்நடை மருந்தாளராக பணிபுரிந்து வருகிறாா். இவரது இரு மகன்களும் ஆத்தூா் வட்டத்துக்குள்பட்ட தனியாா் பளளியில் பிளஸ் 2 பயின்று வருகின்றனா்.
அவா்கள் இருவரையும் விடுதியில் சோ்க்க திங்கள்கிழமை பிற்பகல் பொருள்களை வாங்க வீட்டைப் பூட்டி விட்டு சின்னசேலம் சென்றாா்.
மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோ உடைத்து அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.