வெளிநாட்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
வெளிநாட்டு சிறுமிகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதாகக் கூறி, பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள கும்பூா் அஞ்சுரான்மந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் ராமராஜ் (53). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2023-ஆம் அதே பகுதியில் வசித்த நெதா்லாந்து நாட்டைச் சோ்ந்த 15 வயது இரட்டை சகோதரிகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கச் சென்றாா். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கொடைக்கானல் அனைத்து மகளிா் போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ், ராமராஜை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ராமராஜூக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50ஆயிரம் அபராதமும் விதித்தாா்.