காலி மதுபுட்டிகளை திரும்ப பெறுவது குறித்து கருத்து கேட்கக் குழு அமைப்பு
வெள்ளத்தில் மிதக்கும் பஞ்சாப்! 29 பேர் பலி!
பஞ்சாப் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பஞ்சாப் மாநிலத்தில் கனமழைக்கு 29 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர், ஹிமாசல் பிரதேசம், தில்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகின்றது.
பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை 25 ஆண்டுகள் வரலாறு காணாத கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்துள்ளது.
இன்றும் பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தொடர் கனமழை காரணமாக நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட், குர்தாஸ்பூர், ஃபசில்கா, கபுர்தலா, டர்ன் தரன், ஃபெரோஸ்பூர், ஹோஷியார்பூர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
மாநில அரசின் தரவுகளின்படி, 1,300 க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 6,582 பேர் 122 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக அமிர்தசரஸின் அஜ்னாலா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் மூலம் பால் பவுடர் மற்றும் உலர் உணவுப் பொருள்களை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்திய ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்டு வருகின்றனர்.
ஹோஷியார்பூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சீன பயணத்தை முடித்துவிட்டு திங்கள்கிழமை மாலை தில்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, பகவந்த் மானை தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார்.
இதனிடையே, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கொடுக்க வேண்டிய ரூ. 60,000 கோடியை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமருக்கு பகவந்த் மான் கடிதம் எழுதியுள்ளார்.