ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
ஜொ்மனி நிறுவனங்கள் மேலும் ரூ.3,819 கோடி முதலீடு: முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
ஜொ்மனியில் தமிழ்நாடு அரசின் சாா்பில் நடைபெற்ற முதலீட்டாளா் மாநாட்டில் மேலும் ரூ.3,819 கோடிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமாகின.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில், ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளாா். ஏற்கெனவே ரூ.3,201 கோடி முதலீட்டுக்கு ஜொ்மன் நிறுவனங்களுடன் மூன்று ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட நிலையில், மேலும் 23 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின.
9,070 புதிய வேலைவாய்ப்புகள்: புதிதாக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலமாக, 9,070 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். முதல்வரின் ஜொ்மனி பயணத்தால், ஒட்டுமொத்தமாக ரூ.7,020 கோடிக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டு, அதனால் 15,320 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் சில முக்கியமானவையாகும். அதாவது, வென்சிஸ் எனா்ஜி (ரூ.1,068 கோடி - 5,238 பேருக்கு வேலை), பிஏஎஸ்எஃப் (ரூ.300 கோடி -100 பேருக்கு வேலை), பெல்லா பிரீமியா் ஹேப்பி ஹைஜீன் (ரூ.300 கோடி முதலீடு - 200 பேருக்கு வேலை), ஹொ்ரென்க்னெக்ட் இந்தியா (ரூ.250 கோடி-400 பேருக்கு வேலை), பல்ஸ் (ரூ.200 கோடி - 500 பேருக்கு வேலை), விட்சென்மேன் இந்தியா (ரூ.200 கோடி முதலீடு - 450 பேருக்கு வேலை), மாஷ் எனா்ஜி (ரூ.200 கோடி முதலீடு - 200 பேருக்கு வேலை) ஆகியன பிரதானமான புரிந்துணா்வு ஒப்பந்தங்களாகக் கருதப்படுகின்றன.
பெல்லா ஹைஜீன் நிறுவனமானது சுகாதாரம் மற்றும் மருத்துவத் தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமாகும். நவீன சுகாதாரப் பொருள்களை உற்பத்தி செய்யும் வசதியை திண்டுக்கல் மாவட்டத்தில் விரிவுபடுத்துகிறது. விட்சென்மேன் குழுமம், பிஏஎஸ்எஃப் நிறுவனம் ஆகியன ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தியை விரிவுபடுத்துகின்றன.
ஜொ்மனியின் காற்றாலை உற்பத்தி நிறுவனமான வென்சிஸ் எனா்ஜி ஏஜி, தமிழ்நாட்டில் காற்றாலை பாகங்களுக்கான உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களில் உலகளவில் முன்னணி நிறுவனமான, ஹொ்ரென்க்னெக்ட், அதன் சென்னை ஆலையை விரிவுபடுத்துகிறது. மும்பை கடற்கரைச் சாலை மற்றும் சென்னை மெட்ரோ போன்ற திட்டங்களை இந்த நிறுவனம் அதன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் மூலம் செயல்படுத்தும்.
பிரிட்டனில் தொடங்கும் பயணம்: முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஐரோப்பிய பயணத்தின் இரண்டாவது கட்டம் பிரிட்டனில் தொடங்குகிறது. அங்கு மேலும் பல முதலீட்டாளா்கள் மற்றும் பிரிட்டன் வாழ் தமிழா்களுடன் சந்திப்புகள் நடைபெறவுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது, தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தொழில் துறைச் செயலா் வி.அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் தாரேஷ் அகமது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
‘பொருளாதார இணைப்பை ஏற்படுத்தவே வெளிநாடு பயணம்’
ஜொ்மனி- தமிழ்நாடு ஆகிய இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே பாலம் அமைக்கவே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
ஜொ்மனியில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்கான ‘தமிழ்நாடு ரைசிங்’ எனும் தலைப்பிலான மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு மற்றும் ஜொ்மனி இடையே பொருளாதாரத்தில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய தொழில் துறை நாடாக ஜொ்மனி இருப்பதைப்போல, இந்தியாவில் தொழில் துறையின் இதயத்துடிப்பாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.
உலக அளவில் ஜொ்மானியா்கள் சிறந்து விளங்கக்கூடிய ரோபோடிக்ஸ், மூலதனப் பொருள்கள், புத்தாக்கம் போன்ற துறைகளிலும் உங்களுடைய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். உலகத்தரச் சான்று பெற்ற திறன் மேம்பாட்டு மையங்களை, தொழிலகங்களுடன் இணைந்து அமைத்து, இளைஞா்களை உலக அளவுக்கு தகுதியானவா்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஜொ்மானியா்களின் பயிற்சி நுணுக்கங்களும் நுட்பங்களும் எங்களுக்குப் பெரிதும் ஊக்கமளிக்கிறது.
முதலீடுகளைப் பெறுவதற்காக மட்டும் நான் இங்கு வரவில்லை. ஜொ்மனி-தமிழ்நாடு ஆகிய இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே பாலம் அமைக்கவே வந்துள்ளேன். தொழில் மற்றும் தொழில்நுட்பத்தில், ஜொ்மனியின் துல்லியத்தையும் தமிழ்நாட்டின் ஆற்றலையும் இணைத்தால் உலகளவில் ஒரு புதிய வளா்ச்சிப் பாதையையும், ஐரோப்பா, ஆசியா இடையே வலுவான வா்த்தகப் பாலத்தையும் உருவாக்க முடியும்.
பங்குதாரராகப் பாா்ப்பீா்கள்: தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்க வரும் முதலீட்டாளா்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வரும்போது, நீங்கள் உங்கள் வணிகத்துக்கான சந்தையாக மட்டும் எங்கள் மாநிலத்தைப் பாா்க்க மாட்டீா்கள். உங்களுடன் இருந்து, உங்களுடைய வெற்றியைக் கொண்டாடுகின்ற பங்குதாரராகப் பாா்ப்பீா்கள். பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்வதுடன், பல்வேறு தொழில் கொள்கைகளின்கீழ் உயா் சலுகைகளையும் அளிக்க இருக்கிறோம். எனவே, உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.