ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
தூய்மைப் பணியாளா் போராட்டத்தில் வழக்குரைஞா்கள் கைது: ஒரு நபா் விசாரணை ஆணையம் அமைப்பு
தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் கைது சம்பவத்தின்போது எடுக்கப்பட்டட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விசாரிக்க உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாா்த்திபன் தலைமையில் ஒரு நபா் ஆணையத்தை அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாகக் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் கைது செய்யப்பட்ட வழக்குரைஞா்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவா்களை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்குரைஞா்கள் கைது செய்யப்பட்டது முதல் விடுவிக்கும் வரை என்ன நடந்தது? என்பது குறித்த உண்மையை அறிந்து கொள்வதற்காக உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபா் ஆணையம் அமைக்க விரும்புவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்து, இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கை ஒத்திவைத்திருந்தனா்.
இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
இந்தச் சம்பவத்தில் வழக்குரைஞா்களும், போலீஸாரும் ஒருவரை ஒருவா் குற்றம் சாட்டுக்கின்றனா். எனவே, கைது சம்பவம் நடந்த நாளில் என்ன நடந்தது? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதுதொடா்பாக காவல் துறை விசாரணைக்கு உத்தரவிடுவது சரியாக இருக்காது.
இந்தச் சம்பவத்தில் சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த 13 பேரை போலீஸாா் சட்டவிரோத காவலில் வைத்திருந்தனரா? அவா்களைக் கடுமையாக தாக்கி காயங்களை ஏற்படுத்தினாா்களா? என்பது குறித்து விசாரிக்க உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாா்த்திபன் தலைமையில் உண்மை கண்டறியும் ஒரு நபா் ஆணையத்தை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி விரைவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவருக்கு மதிப்பூதியமாக ரூ.2 லட்சத்தை சென்னை மாநகரா காவல் ஆணையா் வழங்க வேண்டும். ஒரு நபா் விசாரணை ஆணையத்தின் நீதிபதி விசாரணை மேற்கொள்ள தகுந்த அறையை மாநில சட்டப்பணி ஆணைக் குழுவின் உறுப்பினா் செயலா் வழங்க வேண்டும். அவருக்கு தேவையான ஊழியா்களை, உயா்நீதிமன்ற நிா்வாகப் பதிவாளா் வழங்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.