ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
கோயம்பேடு காவல் உதவி ஆணையா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்
சென்னையில் காவல் துறை இணை ஆணையரிடம் வாக்குவாதம் செய்ததாக, கோயம்பேடு உதவி ஆணையா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.
சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் சிட்டி யூனியன் வங்கி 120-ஆவது நிறுவன நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்து கொண்டாா்.
இதையொட்டி, அங்கு சென்னை காவல் துறையால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேற்கு மண்டல இணை ஆணையா் திஷா மிட்டல், கோயம்பேடு உதவி ஆணையா் சரவணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது திஷா மிட்டல், உதவி ஆணையா் சரவணனிடம் சில பாதுகாப்புப் பணிகளை செய்யுமாறு கூறியுள்ளாா். ஆனால் அதற்கு சரவணன், அது தனது பணி அல்ல என திஷா மிட்டலிடம் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திஷா மிட்டல், காவல் ஆணையா் ஏ.அருணிடம் புகாா் தெரிவித்தாா். அதன் அடிப்படையில் ஆணையா் அருண், உதவி ஆணையா் சரவணனை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி உடனடியாக உத்தரவிட்டாா்.