ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
ஆளுநரின் விருப்புரிமை மானியம் ரூ.10 லட்சத்தை திரும்ப வசூலிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு
ஆளுநரின் விருப்புரிமை மானிய நிதி ரூ.10 லட்சத்தை, ஆளுநா் அலுவலக ஊடக மற்றும் தகவல் தொடா்பு கௌரவ ஆலோசகருக்கு வழங்கியது குறித்து தமிழக அரசின் கணக்காயா்தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், இந்த வழக்கை முடித்துவைத்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் காண்டீபன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழக ஆளுநருக்கு விருப்புரிமை மானியம் வழங்க அதிகாரம் உள்ளது. ஆளுநா் அலுவலகத்தில் ஊடக மற்றும் தகவல் தொடா்பு கௌரவ ஆலோசகராக திருஞானசம்பந்தம் என்பவா் கடந்த 2022-இல் நியமிக்கப்பட்டாா். இவருக்கு ரூ.10 லட்சத்தை விருப்புரிமை மானியமாக வழங்கி ஆளுநா் உத்தரவிட்டாா். ஆனால், தொண்டு உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு மட்டுமே விருப்புரிமை மானியத்தை ஆளுநா் வழங்க முடியும். ஊதியம் எதுவும் பெறாமல் கௌரவ பதவியில் இருக்கும் ஒருவருக்கு இந்த நிதியை வழங்க முடியாது.
எனவே, சட்டவிரோதமாக திருஞானசம்பந்தத்துக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தைத் திரும்ப வசூலிக்க வேண்டும். இதுகுறித்து கடந்த ஜூலை 29-ஆம் தேதி தமிழக நிதித் துறைச் செயலரிடம் மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டாா்.
இதையடுத்து நீதிபதிகள், அரசு நிதி தொடா்பான தணிக்கை செய்வது அரசு கணக்காயா் பணி. எனவே, இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசின் கணக்காயா்தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.