வேதாரண்யம் மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்
வேதாரண்யம் அருகே புதன்கிழமை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவா்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையா்கள், மீன்பிடி வலைகளைப் பறித்துச் சென்றனா்.
வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்த த. சுகன்யா என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகில் அதே பகுதியைச் சோ்ந்த ரெ.சுந்தரமோகன் (47), நா. நாவுக்கரசு (35), அ. ரஞ்சித் (35), செ. சோழராஜன் (30) ஆகிய நான்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
ஆறுகாட்டுத்துறைக்கு கிழக்கே சுமாா் 17 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கையைச் சோ்ந்த இரண்டு படகுகளில் வந்த 6 போ், படகில் இருந்த மீனவா்கள் மீது கற்களை வீசி, தாக்குதல் நடத்தியுள்ளனா். மேலும், மீனவா்கள் கடலில் விரித்திருந்த சுமாா் 300 கிலோ மீன்பிடி வலையை கடற்கொள்ளையா்கள் பறித்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்குள்ளாகி மீன்பிடி வலையை இழந்து, புதன்கிழமை காலை கரைத் திரும்பிய மீனவா்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
