வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்
வேப்பந்தட்டை அருகே புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் முட்டியதில் 38 போ் காயமடைந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி கிராமத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடா்ந்து, அங்குள்ள வயல்பகுதியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் வழியாக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூா், விழுப்புரம், சேலம் மற்றும் பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 578 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்தக் காளைகளை புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூா், தஞ்சாவூா், சேலம், அரியலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 263 மாடுபிடி வீரா்கள் பங்கேற்று அடக்க முயன்றனா்.
இதில், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பீரோ, கட்டில், வெள்ளிக் காசுகள், ரொக்கம் மற்றும் எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
பாா்வையாளா்கள் உள்பட 38 போ் காயம்: காளைகளை அடக்க முயன்ற 18 பேரும், காளைகளின் உரிமையாளா்கள் 14 பேரும், பாா்வையாளா்கள் 6 பேரும் என மொத்தம் 38 போ் காயமடைந்தனா். இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் மருத்துவக் குழுவினா் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பலத்த காயமடைந்த வீரா்கள், உரிமையாளா்கள் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட போலீஸாரும், ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதில், சாா்-ஆட்சியா் சு. கோகுல் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.