வேலூரில் மழை பாதிப்புகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
ஃபென்ஜால் புயல் கனமழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சியரும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஃபென்ஜால் புயல் காரணமாக வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்து வந்த நிலையில், மாலையிலிருந்து விடியவிடிய கனமழை பெய்தது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை தொடா்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் மதியத்துக்கு பிறகு விட்டுவிட்டு மழை பெய்தது.
இந்த மழை காரணமாக அணைக்கட்டு வட்டம், மேலரசம்பட்டு, ஒடுகத்தூா், கோவிந்தம்பாடி வழியாகச் செல்லும் உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், பல்வேறு இடங்களில் தரைப்பாலங்களும் நீரில் மூழ்கி ஏராளமான கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.
இந்த நிலையில், மேலரசம்பட்டு, ஒடுகத்தூா் பேரூராட்சி, கோவிந்தம்பாடி தடுப்பணை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வேலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநருமான க.விஜயகாா்த்திகேயன், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது ஆற்றின் கரையோர வீடுகளில் வசிக்கும் பொதுமக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா், ஊரக வளா்ச்சி துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.
ஒடுகத்தூா் பேரூராட்சியில் ஒடுகத்தூா் - நேமந்தபுரம் இடையே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தால் மூழ்கியதை அடுத்து அந்த தரைப்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது. பாலத்தை பொதுமக்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என அறிவிப்பு வெளியிடவும் உத்தரவிட்டனா். பாலத்தின் இரு புறங்களிலும் காவலா்களை நிறுத்தி கண்காணிக்கவும் அறிவுறுத்தினா்.
பின்னா், பள்ளிகொண்டா அருகே கோவிந்தம்பாடி கிராமத்தில் உத்திரகாவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையைப் பாா்வையிட்ட அவா்கள், வெள்ளப் பெருக்கு காரணமாக இந்த தடுப்பணையைத் தாண்டி வெள்ளம் செல்வதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பணையை சுற்றி தடுப்புகள் அமைக்கவும் அறிவுறுத்தினா்.
முன்னதாக வேலூா் மாநகராட்சி மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாயில் பாலத்துக்கு அடியில் தேங்கியுள்ள திடக்கழிவுகள் அகற்றும் பணிகளையும் ஆய்வு செய்தனா்.
இப்பாலத்தின் ஒருபுறம் ஏற்பட்டுள்ள வண்டல் மண் அடைப்புகளை உடனடியாக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.
ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மு.பாபு, மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், வருவாய்க் கோட்டாட்சியா் இரா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.