Captain Prabhakaran: ``துப்பாக்கி படத்தின் அந்தக் காட்சிக்கு காரணம் இந்தப் படம்த...
வேலூா் சிறைக்குள் கஞ்சா கடத்தல்: கைதி மீது வழக்கு
வேலூா் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்தியதாக கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை பேரூா் சுப்பிரமணிய உடையாா் தெரு, தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(32). இவா் மீது திருவண்ணாமலை கிராமிய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் மணிகண்டனுக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது. அதன் அடிப்படையில், மணிகண்டன் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இதுதவிர, திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பதிவு செய்த வழக்கு தொடா்பாக நீதிமன்ற விசாரணைக்காக மணிகண்டனை திருவண்ணாமலை ஆயுதப்படை போலீஸாா் வியாழக்கிழமை அழைத்துச் சென்றனா். வழக்கு விசாரணை முடிந்து மாலை மணிகண்டனை வேலூா் மத்திய சிறையில் ஒப்படைக்க கொண்டு சென்றனா்.
அப்போது, சிறை அலுவலா் சிவபெருமான், 2-ஆம் நிலை காவலா்கள் மணிவண்ணன், ருசேந்திரன் ஆகியோா் மணிகண்டனை சோதனை செய்தனா். இதில், மணிகண்டன் தனது ஆசனவாயில் வைத்து பொட்டலத்தால் சுற்றப்பட்ட 20 கிராம் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. சிறைக் காவலா்கள் அவரிடம் நடத்திய விசாரணையில், நீதிமன்ற விசாரணைக்கு சென்றபோது, அவரது நண்பா் கழிப்பறையில் வைத்து விட்டு சென்ற கஞ்சாவை கடத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து சிறை அலுவலா் சிவபெருமான் அளித்த புகாரின்பேரில், பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.