நாய் கடித்ததில் காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு
குடியாத்தம் அருகே சில மாதங்களுக்கு முன் நாய் கடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் மீண்டும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட காளியம்மன்பட்டியைச் சோ்ந்த சந்திரசேகரன் மகள் மீனாட்சி (19). இவரை கடந்த சில மாதங்களுக்கு முன் நாய் கடித்ததாம். நாய் கடிக்கு அப்போதே மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாராம். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் இவருக்கு உடல் நலம் குன்றியதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.