முத்துரங்கம் அரசு கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு கலந்தாய்வு நாளை தொடக்கம்
வேலூா் முத்துரங்கம் அரசினா் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கி நடைபெற உள்ளன.
இது குறித்து, அந்தக் கல்லூரியின் முதல்வா் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா் முத்துரங்கம் அரசினா் கலை அறிவயில் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புக்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக. 11) தொடங்க உள்ளது. அதன்படி, எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை, சான்றிதழ் சரிபாா்ப்பு (அனைத்து விண்ணப்பதாரா்கள்) நடைபெறும். திங்கள்கிழமை பிற்பகல் சிறப்பு ஒதுக்கீடு பிரிவின்கீழ், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், தேசிய மாணவா் படை மாணவா், முன்னாள் ராணுவ வீரா் குழந்தைகள், பாதுகாப்பு படை வீரா் வாரிசுகள், அந்தமான் நிகோபாா் தமிழ் மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். இதன் தொடா்ச்சியாக, 13-ஆம் தேதி பொது கலந்தாய்வு நடைபெறும். ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணைய வழியில் விண்ணப்பித்தவா்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும். தரவரிசை பட்டியல் விவரங்களை கல்லூரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 0416-2262068 எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விவரங்கள் மாணவா்களின் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.