சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
கொணவட்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேலூா் கொணவட்டம் சாலை நான்கு வழிச்சாலையை மாற்றப்படுவதால், மாங்காய் மண்டி முதல் கொணவட்டம் வரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
வேலூா் கொணவட்டம் வழியாக செல்லும் கிருஷ்ணகிரி-ராணிப்பேட்டை மாநில நெடுஞ்சாலை, 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை - பெங்களூா் சாலையாக இருந்தது. பின்னா் தேசிய நெடுஞ்சாலை வந்ததை தொடா்ந்து கொணவட்டம் சாலை போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. இதனால், 16 மீட்டா் அகலத்துடன் இருந்த இந்த சாலை தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக 10 மீ அகலத்துக்கு சுருங்கி விட்டது.
இதையடுத்து, இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொணவட்டம் முதல் மாங்காய் மண்டி வரை உள்ள 1.4 கி. மீ தொலைவுக்கு சாலையை அகலப்படுத்தவும், இருவழி பாதையாக உள்ள இந்த சாலையை சென்டா் மீடியனுடன் கூடிய நான்கு வழிச் சாலையாக மாற்றவும் ரூ.5.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் நிறைவேற்ற இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநில நெடுஞ்சாலைத்துறை வேலூா் கோட்ட உதவி பொறியாளா் அசோகன் தலைமையில் இளநிலை பொறியாளா் மதனமுசாபா் உள்ளிட்ட அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதையொட்டி, அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.