Mariselvaraj-ஐ வாழ்த்தி பாடிய Vadivelu at Ananda Vikatan Cinema Awards 2024 | UN...
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்பும், பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது தோ்ச்சி, பிளஸ் 2 அல்லது பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு போன்ற கல்வித் தகுதிகளுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவா்கள், கிண்டியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம்.
விண்ணப்பதாரா் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடா்ந்து புதுப்பித்து வருபவராகவும், 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடா் அல்லது பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாதகவராகவும் இருக்க வேண்டும். மேலும், தனியாா் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும், சுயவேலைவாய்ப்பில் ஈடுபடாதவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் உரிய விண்ணப்பப் படிவத்தை கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கிண்டியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.